Monday, October 7, 2019

'நவீன கங்கை'யோ பா.ஜ.க.?

கடந்த 1990ஆவது ஆண்டில் பிரேம் சிங் தமாங் சிக்கிம் மாநில கால்நடைத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார்.  அவர் மீது பசுக்கள் விநியோக திட்டத்தில் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 2003 ஆம் ஆண்டில் வழக்குத் தொடரப்பட்டது.   கடந்த 2017 ஆம் ஆண்டு சிக்கிம் உயர்நீதிமன்றம் பிரேம்சிங்குக்கு சிறைத்தண்டனை  விதித்தது.
பிரேம்சிங் 2018ஆம் ஆண்டு வரை சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார்.  அத்துடன் அவர் குற்ற வழக்கில் தண்டனை பெற்றதால் ஆறு ஆண்டுகள் -  வரும் 2024 ஆம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட முடியாது.
சமீபத்தில் நடந்த சிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரேம் சிங் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில் இவர் முழுக்க முழுக்க பாஜகவின் ஆதரவாளராக மாறினார்.  இதனை அடுத்து பிரேம்சிங் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிரேம் சிங் முதல்வராக அனுமதி கோரி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
அந்த கோரிக்கையை ஆணையம் ஏற்றதால் அவர் முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டார். இன்னும் ஆறு மாதங்களுக்குள் அவர் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதால் தனது தேர்தல் போட்டி தடைக்காலத்தைக் குறைக்கச் சொல்லி ஆணையத்திடம் பிரேம்சிங் மனு அளித்தார். இதனை ஏற்று தேர்தல் ஆணையம் பிரேம் சிங்குக்கு வழங்கிய ஆறு ஆண்டுகால தடை உத்தரவை 13 மாதங்களாகக் குறைத்துள்ளது.   இதன்படி அவருடைய தடைக்காலம் கடந்த மாதம் 10 ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் விரைவில் அவர் ஒரு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு உள்ளது. இவை அனைத்தும் அவர் பாஜகவிற்கு முழுமையாக ஆதரவு தெரிவித்த பிறகு அவருக்காக தேர்தல் ஆணையம் முற்றிலும் வளைந்து கொடுத்துள்ளதால் நடந்துள்ளவையாகும். அதாவது தேர்தல் ஆணையம் அவர் இன்னும் 6 ஆண்டுகள்வரை போட்டியிடமுடியாது என்ற விதியை 13 மாதங்கள் என்று மாற்றி அதையும் 8 மாதங்கள் என்று குறைத்து அவரை இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது.  இவை அனைத்தும் சமீபத்தில் அவர் டில்லி வந்து அமித்ஷாவைச் சந்தித்துச்சென்ற பிறகு நடந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.
குற்றவாளிகள் யாரும் பாஜகவிற்குச் சென்றால் அவர்கள் நீதிமான்களாகவும்,  மத்திய அமைச்சர்களாகவும், மாநில முதல்வராகவும் ஆகிவிடுவார்கள்.
சாரதா சிட்பண்ட் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் திரிணாமுல் காங்கிரசில் இருந்து பாஜக விற்கு சென்றதும் பதவிகள் தேடி வருகின்றன. அதே போல் லோக் ஆயுக்தாவால் ஊழல் குற்றச்சாட்டு சாட்டப்பட்டு பதவியிழந்த எடியூரப்பா மீண்டும் கருநாடக மாநில முதல்வர் ஆகிவிட்டார்.  ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக  தமிழகத்தின் துணை முதல்வர் மற்றும் பல்வேறு அமைச்சர்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டிய சேகர் ரெட்டியின் வேலூர் வீடு உட்பட பல இடங்களில் மத்திய அமலாக்கத் துறை, சிபிஅய் நடத்திய சோதனையில் 2000 ரூபாய் நோட்டுக்கள் ரூபாய் 120 கோடிக்கு மேல் கைப்பற்றப்பட்டன. அதாவது பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு மக்கள் ஒரு 2000 ரூபாய் தாளுக்காக வங்கி வாசலில் கால் கடுக்க நின்றுகொண்டு இருந்த போது, அதிமுகவுக்கு மிகவும் வேண்டப்பட்ட சேகர் ரெட்டி வீட்டில் கோடிக்கணக்கான மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்கின்றன.   கருநாடகா ரெட்டி சகோதரர்கள் வீட்டு திருமணத்தில் ரூபாய் 4 கோடிக்கு 2000 ரூபாய் புதிய தாளில் மேடை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.   ஆனால் தற்போது சேகர் ரெட்டி மீண்டும் மத்திய அரசின் ஒப்பந்தங்களைப் பெறும் முக்கிய ஒப்பந்தக்காரராக மாறிவிட்டார். கருநாடக ரெட்டி சகோதரர்களின் உறவினருக்கு கருநாடக பாஜக ஆட்சியில் அமைச்சர் பதவி தரப்பட்டுவிட்டது.
பொதுவாக கங்கையில் தலைமுழுகினால் செய்த பாவம் எல்லாம் போய்விடும் என்பார்கள், இந்து மதவாதிகள். அதேபோல் எந்த குற்றவாளிகளாக இருந்தாலும் பாஜகவில் சேர்ந்தால் அவர்களின் குற்றங்கள் அனைத்தும் காணாமல் போய் அவர்கள் பளபளக்கும் உத்தமராகி விடுவார்கள்.
ஏனெனில் சாக்கடைக் கங்கையை சுத்திகரிக்க கோடிக் கோடியாக பணத்தைக் கொட்டியழும் இந்துத்துவவாதிகள் ஆயிற்றே!
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மிகப் பெரிய குற்றவாளிகளாக கடுமையான  பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் நிலுவையில் இருந்தவர்கள் எல்லாம் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும், மத்திய அமைச்சர்களாகவும் ஆகிட வில்லையா?
இந்த நிலையில் தார்மீகத்தைப் பற்றியும், பொது ஒழுக்கத்தைப் பற்றியும் இவர்கள் நீட்டி முழக்குவதில் மட்டும் குறைச்சல் இல்லை.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.