Friday, October 4, 2019

எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய மாட்டோம்: உச்சநீதிமன்றம் உறுதி

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்.சி., எஸ்.டி.) எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிட மாட்டோம் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை கூறியது.
1989-ஆம் ஆண்டைய எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி, குற்றம்சாட்டப்படும் நபர்களை விசாரணையின்றி கைது செய்ய முடியும். அவர்கள் பிணை பெற முடியாது. ஆனால், அந்தச் சட்டப் பிரிவுகளை ரத்து செய்து, உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.
அதன்படி, இச்சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்படும் நபர்களை எந்தவித விசாரணையுமின்றி கைது செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. அத்துடன் கைதாகும் நபர்கள் ஜாமீன் பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டது.
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை அப்பாவி மக்களுக்கு எதிராக பழிவாங்கும் நோக்கில் சிலர் பயன்படுத்துவது தடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததை அடுத்து, இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  மேலும், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கடுமையான பிரிவுகளைச் சேர்த்து, சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றியது.
இந்நிலையில், மத்திய அரசின்  மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. அதில், முந்தைய உத்தரவுகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தது.
இதனிடையே, மத்திய அரசின் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய மாட்டோம். அதேநேரத்தில், குற்றச் செயலுக்கான முகாந்திரம் இல்லையென நீதிமன்றம் கருதினால், குற்றம்சாட்டப் பட்ட நபருக்கு நீதிமன்றம் முன்பிணை வழங்கும். அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள உரிமைகளை நீதிமன்றம் பறிக்காது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.