Tuesday, October 8, 2019

காந்தியின் 'அஸ்தி'மீது கூட கோபமா?

காந்தியாரின் 150ஆவது பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதியில் மத்தியப் பிரதேசத்தில் அவருடைய 'அஸ்தி'யை சிலர் திருடிச் சென்றதோடு, அவருடைய சிலை அருகே 'தேசத்துரோகி' என எழுதியும் வைத்துள்ளனர்.
காந்தி இறந்த பிறகு சபர்மதி நதிக்கரையில் எரியூட்டப்பட்ட அவரது உடலின் சாம்பல் ('அஸ்தி') இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நினைவுச்சின்னமாக வைக்கப்பட்டுள்ளது,  அதில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டத்தில் லட்சுமண் பாக் என்ற பகுதியில் காந்தியின் சாம்பல் கண்ணாடிப் பேழைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த சாம்பலுக்கு மத்தியப்பிரதேச ரேவா மாவட்ட ஆட்சியர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் காந்தியின் பிறந்த நாள் மற்றும் அவரது நினைவு நாளில் மரியாதை செலுத்துவார்கள்.
காந்தியின் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் நாடு முழுவதும் இந்திய அரசின் சார்பிலும், அனைத்து மாநிலங்களின் சார்பிலும் கொண்டாடப்பட்டது. ரேவா மாவட்டத்திலும் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு ரேவா மாவட்ட காங்கிரஸ் தலைவர் குர்மீத் சிங், காந்தி சாம்பல் வைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது காந்தியின் நினைவிடத்தில் காந்தி சாம்பல் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடியை உடைத்து சாம்பல் வைக்கப்பட்டிருந்த கலசத்தை தூக்கிச்சென்றுள்ளது தெரிய வந்தது.
மேலும் அந்த இடத்தில் "காந்தி ஒரு தேசத்துரோகி" என்று எழுதிவைத்துள்ளனர். மேலும் அங்கிருந்த காந்தி படத்தினையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர். இதைக் கண்ட அவர் காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். இதனை அடுத்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது 153, 504 மற்றும் 505 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட காவல்துறை ஆணையர் அபித் கான் கூறும் போது, "நாங்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவருகிறோம். குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம்" என்று கூறினார்.
காந்தி 'அஸ்தி' திருட்டு தொடர்பாக கருத்து தெரிவித்த காந்தியின் பேரனின் மகன் துசார் காந்தி "யாரோ சிலர் காந்தியின் 'அஸ்தி'யை திருடி சென்று விட்டனராம், மேலும் அங்கு காந்தி ஒரு தேசத்துரோகி என்று எழுதி வைத்துச் சென்று விட்டார்களாம், அவர்களுக்கு காந்தி 'மகாத்மா'வாக தெரியவில்லை. தேசப் பிதாவாகத் தெரியவில்லை, அது யாரோ ஒருவரது 'அஸ்தி' என்று மட்டுமே தெரிந்தது, ஆனால் அது எனது கொள்ளுத் தாத்தா என்பதால் எனது மனது வலிக்கிறது" என்று கூறினார்.
ஒரு பக்கத்தில் பிரதமர், காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். காந்தியாரைப்பற்றி கசிந்து உருகுகிறார்கள். இன்னொரு பக்கத்தில் காந்தியின் 'அஸ்தி'க்கேகூட பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக் கேடு!
அடல் பிஹாரி வாஜ்பேயி அவர்கள் பிரதமராக இருந்தபோது டில்லி, மும்பை போன்ற இடங்களில் இந்த சங்பரிவார் நாடகம் ஒன்றை அரங்கேற்றம் செய்தது. அதன் பெயர் 'மை நாதுராம் கோட்சே போல்தா' என்பதாகும்.
இதில் கோட்சேதான் கதாநாயகன். காந்தியார் வில்லன். காந்தி என்ற அரக்கனைத்தான் கோட்சே அவதாரம் எடுத்துக் கொன்றான் என்பது அந்நாடகத்தின் அடிப்படை அம்சமாகும்.
மக்கள் மத்தியிலே காந்தியாரை இழிவுபடுத்தி செய்து வரும் பிரச்சாரத்தின் விளைவுதான், மத்தியப் பிரதேசத்தில் காந்தியாரின் 'அஸ்தி' காணாமல் போன தற்கும் - படம் உடைக்கப்பட்டதற்கும் - கேவலமாக எழுதப்பட்டதற்கும் காரணமாகும்.  காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேயின் சிலையைத் திறக்கும் அளவுக்கு அழுக்காறு நோய் பரவியுள்ளது என்பதால்தான் - இந்தியப் பிரதமரை பக்கத்தில் வைத்துக் கொண்டே வெளிநாட்டு ஆட்சியாளர்கள் இந்தியாவில் ஏற்பட்டு இருக்கும் மதச் சார்பின்மையை இடித்துக் கூறுகிறார்கள் - இது இந்தியாவுக்குப் பெருமைதானா?

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.