Tuesday, October 22, 2019

மொழிவழி மாநிலம் அமைந்த நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு நாள் என தமிழக அரசு கொண்டாட வலியுறுத்தல்

மொழிவழி மாநிலம் அமைந்த நவம்பர் முதல் நாளை "தமிழ்நாடு நாள்" - என தமிழக அரசு கொண்டாடவேண்டும், அரசு விடுமுறையாக அறி விக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து இந்திய ஸ்டேட் வங்கியின் முன்னாள் தொழிற்சங்க தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.பி.இராமன் அவர்கள் தமிழக, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டிய ராஜன் மற்றும் தமிழக அரசு தலைமைச் செயலாளர் ஆகி யோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 63 ஆண்டுகளை கடந்து 64ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இத்தருணம்; தமிழ் கூறும் நல்லுலகுக்கென தனி மாநிலம் அமைக்கப்பட்ட நாள்.
அத்தகைய சிறப்புமிக்க நாளை தமிழ் மொழியின் தொன்மை, தமிழர் தம் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகி யவற்றை உயர்த்திப் பிடித்து, உலகறியச் செய்யும் நாளாக, நாடு தழுவிய அர்த்தமுள்ள கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யும் வகையில் ஆண்டுதோறும் (நவம்பர் முதல் நாளை) அரசு விடு முறை நாளாக அறிவித்திட தமிழக அரசை வேண்டுகிறோம்.
நமது அண்டை மாநில மான கருநாடகாவில் ஆண்டு தோறும் மொழிவழி மாநிலம் அமைந்த நவம்பர் முதல் நாளை விடுமுறை நாளாக அறிவித்து "கன்னட ராஜ்ய உற்சவம்" கொண்டாடுவதைப் போல, தமிழக அரசும் நவம்பர் மாதம் முதல் நாளை "தமிழ்நாடு நாள்" என அறிவித்து அரசு விடுமுறையாகவும் அறிவித்து செம்மொழியாம் நமது தமிழ் மொழியின் விழுமிய சிறப்புகளை உலகம் உணரச் செய்ய வேண்டுமென இந்திய ஸ்டேட் வங்கியின் முன்னாள் தொழிற்சங்கத் தலைவர்களின் கூட்டமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.