Wednesday, October 23, 2019

சத்திஸ்கர் அரசின் முடிவு

சத்திஸ்கர் மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) தேவையில்லை என்றும், வாக்குச் சீட்டுகளைக் கொண்டே தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் மாநில முதல் அமைச்சர் பூபேஷ் பாகேல் அறிவித்து உள்ளார்.
வாக்குச்சீட்டு முறை தேர்தலுக்கு கடந்த சில ஆண்டுகளாக முடிவு கட்டிய தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவை செயல்படுத்தி வருகிறது. இந்த இயந்திர வாக்குப் பதிவில் தில்லுமுல்லு நடைபெறுவதாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், சத்திஸ்கர் மாநிலத்தில் நடைபெற உள்ள  உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் வாக்குச் சீட்டு வாக்குப் பதிவுக்கு ஆதரவாக ஈ.வி.எம்-களை அகற்றி விட்டு, மீண்டும் பழைய முறையான வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த மாநில அரச முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக வாக்குச்சீட்டு முறையில் மீண்டும் தேர்தல் நடத்தும் முதல் மாநிலமாக சத்திஸ்கர் மாறி உள்ளது.
சத்திஸ்கர் மாநிலத்தில் ஏற்கெனவே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தேர்தல் விதிகள் ஆய்வு தொடர்பாக அமைச்சரவைக் குழு அமைக்கப் பட்டிருந்த நிலையில், நேற்று (அக். 22) முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில், அமைச்சரவைக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் தேர்தல்களில் ஈ.வி.எம்-களுக்குப் பதிலாக வாக்குச் சீட்டைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சத்திஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தலைமையிலான அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பரிந்துரைகள் மாநில ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்துக் கூறிய மாநில அமைச்சர்,  "நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் வாக்குச் சீட்டைப் பயன்படுத்துவதற்கும், மேயர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்களை நடத்துவதற்கும், நகராட்சித் தேர்தல் சட்டத்தைத் திருத்தும் வகையில் திருத்தம் செய்ய சத்திஸ்கர் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. நடைபெற உள்ள  உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களில் வாக்குச் சீட்டைப் பயன்படுத்துவதை சம்பந்தப்பட்ட சட்டம் தடை செய்யாது" என்று தெரிவித்து உள்ளார்.
கடந்த ஆண்டு (2018)  சத்திஸ்கரில்  நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 15 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இவிஎம் இயந்திரத்துக்குப் பதிலாக மீண்டும்  வாக்குச்சீட்டுத் தேர்தல் முறையை கொண்டு வர முயற்சி எடுத்துள்ளது.
இதுகுறித்துக் கூறிய  சத்திஸ்கர் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிறீவாஸ்தவ், வாக்குச் சீட்டைப் பயன்படுத்துவதை எதிர்த்ததுடன்,  இது “காங்கிரசின்  சதி” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், இதுகுறித்து கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சைலேஷ் திரிவேதி,  “சத்திஸ்கரில்  இவிஎம் இயந்திரம் குறித்த சர்ச்சைகள் ஏற்கெனவே வெடித்துள்ள நிலையில், அங்குள்ள வாக்காளர்கள்   உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களில் வாக்குச் சீட்டைப் பயன்படுத்துவதற்கான முடிவை வரவேற்றுள்ளனர்" என்று கூறினார்.
அரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பா.ஜ.க. வேட்பாளர் கூறுகிறார், "எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்குத்தான் வாக்குப் பதிவாகும்" என்று கூறியுள்ளதைப் பார்த்தால் சத்திஸ்கர் மாநில அரசின் முடிவு சரியானதே என்றுதான் தோன்றுகிறது.
பிஜேபி என்று சொன்னாலே எதிலும் சந்தேகிக்க வேண்டியுள்ளது என்கிற அளவுக்கு அதன் சிந்தனைகளும், போக்குகளும், நடவடிக்கைகளும் அமைந்திருப்பதை யார்தான் மறுக்க முடியும்?

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.