Tuesday, October 8, 2019

‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ தலையங்கம்

தேசத் துரோக வழக்கு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்!

இந்திய ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்காதீர்!

சென்னை,அக்.8, 'போதும் போதும்; பட்டது போதும்' என்ற தலைப்பில் 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஆங்கில நாளேடு எழுதியுள்ள தலையங்கத்தில், தேசத்துரோக வழக்கு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்; இந்திய ஜனநாயகத்தைக் கேலிக் குரியதாக்கி விடாதீர்கள்' என்று குறிப்பிட்டுள்ளது.
'போதும் போதும்' என்ற பொதுத் தலைப்பிலும், 'முன்னணி அறிவு ஜீவிகள் 49 பேர் மீதான அற்பத்தன மான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும்' என்பதோடு இந்திய ஜனநாயகத்தைக் கேலிக்குரியதாக மாற்றி விடாதீர்கள்' என்கிற துணைத்தலைப்புகளுடனும் நேற்று 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' (7.10.2019) ஆங்கில நாளேட்டில் வெளியான தலையங்கம் வருமாறு:
இந்தியா சுதந்திர மடைந்து 72 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அற்பமான அர்த்தமற்ற மிகக் கொடூரமான காலனி ஆதிக்கச் சட்டத்தைப் போன்ற தேசத் துரோக வழக்கைப் பிரயோகித்திருப்பதன் மூலம், நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை வகித்து செயல்பட்ட காந்தியாருக்கு எடுத்த உயர்தர விழாக்கள் எல்லாமே வீணாக அர்த்தமற்றதாகி விட்டன.
கும்பல்களின் வன்முறை மற்றும் கொலைக் குற்றங்கள் நாட்டில் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்து, சிந்தனையாளர்கள், கலைத்துறை வல்லுநர்கள் உள்ளிட்ட பல்துறை முன்னணி யினர் பிரதமருக்கு கடிதம் எழுதிய தற்காக நாட்டின் அமைதியைக் கெடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, தேசத்துரோக வழக்கு மீண்டும் புனையப் பட்டுள்ளது.
தேசத்துரோகம் பற்றி நேரடியாக அர்த்தம் காணவும், கலவரத்தை உடனடியாகத் தூண்டிவிடுவது பற்றியும் உச்சநீதிமன்றம் அதற்கான எல்லை பற்றியும் முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், நடைமுறையில் இந்தியக் குடிமக்கள் அதுபற்றி பொதுவாகவே கேள்வி எழுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஜனநாயகரீதியில் கருத்துகளை வெளியிடுவதற்கு அனுமதி தரலாம். அடிப்படை உரிமை தொடர்பான சட்டங்களான தேசத்துரோக சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் வரலாற்றுக் குப்பைகளில் தூக்கி எறியப்பட வேண்டும்.
அந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான எழுத்தாளர் அமித் சவுத்ரி, "அடிப்படை உரிமைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இதுவரை எந்தத் தகவலுமில்லை; இந்திய ஜனநாயகம் முடிவிற்கு வந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட வில்லை'' என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கடிதத்தில் கையொப்பமிட்டவர்கள்மீது முசாபர்பூர் தலைமை நீதித்துறை மாஜிஸ்டிரேட் சூர்யகாந்த் திவாரி எந்த வகையில் வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கி இருக்கிறார். சட்டத்தையும் அடிப்படை உரிமைகள் பற்றியும் எப்படி அவர் புரிந்து கொண்டிருக்கிறார். இதுபோன்ற புகார்களும் முதல் தகவல் அறிக்கைகளும் இருப்பது புரியாத புதிராக உள்ளன.
நாட்டின் உருவத்தையே சிதைத்து விட்டார்கள் என்பதுதான் கையெழுத்திட்ட அந்த வல்லுநர்கள்மீதான விநோதமான குற்றச்சாட்டு. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்வதில்தான் மிகப்பெரும் பெருமிதமும் பெருமையும் உள்ளது. எனவேதான் அது பாகிஸ்தானிடம் இருந்து வேறுபட்டு இருக்கிறது. சர்வதேச அளவில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பெருமளவில் முயற்சி மேற்கொண்டுவரும் பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா தனித்திருக்க அதன் ஜனநாயக அமைப்பே காரணம்.
அப்படிப்பட்ட நிலையில், ஜனநாயக ரீதியில் கருத்துகளை வெளியிட்டதற்காக, அமைதியை குலைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, தேசத்துரோக வழக்கை சுமத்தி இருப்பது, இந்திய ஜனநாயகம் கேலிக்குரியதாகிற நிலை உள்ளது. இதற்கு மேலும் இந்த நாட்டின் கவுரவத்தைக் கெடுக்க முடியாது. பாகிஸ்தானுடன் ஒத்துப்போவதில் வெற்றி பெற்றதாக மாறிவிடக் கூடும்.
இந்தப் பிரச்சினையில் தன்னுடைய உறுதியான நிலையை அரசு தெளிவாகக் குறிப்பிட வேண்டும். கீழமை நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து உயர்நீதித்துறையினர் தாமாக முன்வந்து விசாரித்து அந்த உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அண்மைக்கால வரலாற்றில் தவறாகப் பயன்படுத்தப்படும் தேசத்துரோக வழக்கு பற்றி அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளதை முழுவதுமாக உச்சநீதிமன்றம் வெளிப் படையாக மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே கருத்தை எதிரொலிக்கும் வகை யில், 'தி இந்து', 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேடுகளிலும் தலையங்கங்கள் வெளியாகி உள்ளன.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.