Friday, October 4, 2019

போட்டிப் போட்டுக் கொண்டு தமிழ்நாட்டை வஞ்சிப்பதா?

ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு - (இன்டர் வியு மற்றும் நான்-இன்டர்வியு)  பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வில் மொழித்தாளுக்குப் பதிலாக பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டது.
முன்னதாக  முதல்நிலைத் தேர்வில்  100  பொது அறிவு வினாக்கள் மொழிப் பாடத்தில் இருந்து கேட்கப்படும். இந்த மொழிப் பாடத்தை ஆங்கிலம்/தமிழ் என இரண்டில் எதை வேண்டுமானலும் தேர்வர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இந்த மொழிப் பாடத்தில் உள்ள நூறு கேள்விகள் தான் வெற்றி தோல்வியைத் தீர்மானித்து வந்தன. உதாரணமாக, நகர்ப்புறத்தில் இருக்கும் மாணவர்கள் பயிற்சி வகுப் புக்குச் சென்று பொது அறிவில் தங்கள் மதிப்பெண்களை உயர்த்தப் பார்ப்பார்கள். கிராமப்புறத்தில் இருக்கும் மாணவர்கள் போதிய வசதி இல்லாமையால் மொழிப் பாடத்தில் தங்கள் மதிப்பெண்களை உயர்த்த நினைப்பார்கள்.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சியின் இந்த மாற்றத்திற்கு பல தலைவர்களும், கட்சிகளும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மொழிப் பாடம் நீக்கப்பட்டது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி. இந்த மொழிப் பாட நீக்குதல் அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தமிழே தெரியாமல் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் தமிழக அரசுப் பணியில் சேர்வதற்கே இது வழிவகுக்கும். எனவே,  மொழிப் பாடத்தை நீக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பம்
தேர்வாணையம் அறிவித்துள்ள தொகுதி-2 முதனிலைத் தேர்வில் பொதுத் தமிழ்த் தாள் நீக்கப்பட்டாலும் அதில் கேட்கப்படும் வினாக்கள் முதனிலை மற்றும் முதன்மைத் தேர்வில் சேர்க்கப் பட்டுள்ளன. தமிழ் இலக்கியங்கள், திருக்குறள் என தமிழ் சார்ந்த பகுதிகள் இத்தேர்வுகளில் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று சமாதானம் கூறப்படுகிறது.
தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே. இளமாறன் கூறியுள்ள கருத்து முக்கியமானது.
முதல் நிலைத்தேர்வில் முழுமையாக தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு 175 மதிப்பெண் பிரதானப் பாடங்களுக்கும், 25 மதிப்பெண் மனத்திறன் வளர்ச்சி மனக் கணக்கு உள்ளிட்டவைக்கு என 200 மதிப்பெண் அறிவித்திருப்பது ஒட்டுமொத்த தமிழர்கள் மனதையும் புண்படுத்துவதாக உள்ளது.
முதன்மைத் தேர்வில் தமிழ்மொழி வளர்ச்சி, பண்பாடு, கலாச்சாரம், திருக்குறளுக்கு முக்கியத்துவம் உள்ளிட் டவையினை மகிழ்ச்சியோடு வரவேற்றாலும் முதல் நிலைத் தேர்வில் வெற்றிப்பெற்றால் தானே முதன்மைத் தேர்விற்குச் செல்லமுடியும்.
எனவே, இந்த அறிவிப்பை உடனே தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற கருத்து முக்கியமானது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் திற்கென்று ஒரு தனி மரியாதை இருக்கிறது. இராம சுப்பிரமணியம் போன்றவர்கள் தலைவராக இருந்த தேர்வாணையத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி நட்ராஜ் (தற்போது சென்னை மயிலாப்பூர் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்) தலைவராகக் கொண்டு வரப்பட்டபோது ஏகப்பட்ட குளறுபடிகள்! (இவர்கள்தான் தகுதிக்கும், திறமைக்கும் பெயர் போனவர்களாம்!)
7.11.2016 அன்று ஒரு தகடு தத்தம் தமிழ்நாட்டில் நடந்தது. அதன்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசு நடத்தும் தேர்வுகளை இந்தியா முழுவதும் உள்ளவர்களும், நேபாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் தேர்வு எழுதலாம் என்று கதவு திறக்கப்பட்டது தமிழ்நாடு அதிமுக அரசால்! இப்பொழுது தமிழையே தூக்கி எறிந்து விட்டார்கள். மத்திய பிஜேபி அரசும், மாநில அதிமுக அரசும் போட்டி போட்டுக் கொண்டு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறார்கள் - உஷார்! உஷார்!!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.