Saturday, October 5, 2019

மின் இணைப்பு கட்டணம் உயர்வு

வீடு உள்ளிட்ட தாழ்வழுத்த பிரிவில், ஒருமுனை மின் இணைப்பு வழங்குவதற்கான பல்வகை கட்டணத்தை, 1,600 ரூபாயில் இருந்து, 6,400 ரூபாயாக உயர்த்தி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மின் வாரியம், வீடு உள்ளிட்ட கட்டுமானங்களில், புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு, பல்வகை என்ற கட்டணத்தை வசூலிக்கிறது. அதில், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் வைப்பு தொகை, பதிவு கட்டணம், வளர்ச்சி கட்டணம், வைப்பு தொகை ஆகியவை இடம்பெறுகின்றன. இது, ஒரு முறை மட்டும் வசூலிக்கப்படுகிறது.பின், மின் பயன்பாட்டு கட்டணம், இரு மாதங்களுக்கு, ஒரு முறை வசூலிக்கப்படுகிறது. மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது. அதன்படி, பல்வகை கட்டணத்தை உயர்த்துமாறு, மின் வாரியம் சார்பில், ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, ஆணையம், செப்., 25இல், சென்னை, தியாகராயர் நகரில், மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி; திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொகுதிகளில், இம் மாதம், 21இல் இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் முடிந்ததும், கட்டணத்தை உயர்த்தும் அறிவிப்பு வெளியிட திட்டமிடப்பட்டது. இந்த சூழலில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, எந்நேரத்திலும் வெளியாகலாம் என, தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, ஆணையம், நேற்று இரவு, புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய கட்டணம், இன்று முதல் அமலுக்கு வருகிறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.