Monday, April 22, 2019

மக்களவை தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை

இடைத்தேர்தலில் 11.56 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை
தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சத்து 17 ஆயிரத்து 983 பேர் வாக்களிக்கவில்லை. அது மட்டுமல்லாமல் 18 சட்ட மன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் 11 லட்சத்து 56 ஆயிரத்து 730 பேர் வாக்களிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளி யாகியுள்ளது.
தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக் கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் அமைதியாக நடந்து முடிந்தது. மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல் வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி, பேரணி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைளை எடுத்தது.
அது மட்டுமல்லாமல் சனி, ஞாயிறு என 10 நாட்கள் சிறப்பு முகாம்களை நடத்தியது. இவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தி யும் மொத்தம் 71.90 சதவீதம் தான் வாக்குப்பதிவாகியுள்ளது. மக்களவை தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் மொத்தம் 5 கோடியே 84 லட்சத்து 42 ஆயிரத்து 767 வாக்காளர்கள் உள்ளனர்.


இதில் ஆண்கள் 2 கோடியே 88 லட்சத்து 96 ஆயிரத்து 279 பேர். 2 கோடியே 95 லட்சத்து 40 ஆயிரத்து 800 பேர் பெண்கள். 5688 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். ஆனால், இதில் 4 கோடியே 20 லட்சத்து 24 ஆயிரத்து 784 பேர் மட்டுமே வாக்களித் துள்ளனர். அதாவது, 1 கோடியே 64 லட்சத்து 17 ஆயிரத்து 983 பேர் வாக்களிக்கவில்லை. 18 சட்ட மன்றத்துக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 47 லட்சத்து 32 ஆயிரத்து 775 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 23 லட்சத்து 40 ஆயிரத்து 553 பேர் ஆண்கள். பெண்கள் 23 லட்சத்து 91 ஆயிரத்து 706 பேர். மூன்றாம் பாலினத்தவர் 516 பேர். இதில் 75.56 சதவீதம் பேர் மட்டுமே, அதாவது 35 லட்சத்து 76 ஆயிரத்து 45 வாக்கா ளர்கள் மட்டுமே வாக்களித்துள் ளனர். இதில் ஆண்கள் 17 லட்சத்து 56 ஆயிரத்து  878 பேரும், பெண்கள் 18 லட்சத்து 19 ஆயிரத்து 91 பேரும், மூன்றாம்  பாலினத் தவர் 76 பேரும் அடங்குவர். ஆனால் ஆனால், 11 லட்சத்து 56 ஆயிரத்து 730 பேர் வாக்களிக்க வில்லை.

ராகுல் போட்டியிடும் வயநாடு உட்பட 115 தொகுதியில் 23ஆம் தேதி தேர்தல்


நாடுமுழுவதும் 3ஆம் கட்ட தேர்தலை சந்திக்க உள்ள 115 மக்களவை தொகுதிகளிலும், ஒடிசாவில் 42 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 23ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த 11ஆம் தேதி நடந்தது. தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட 95 தொகுதிகளில் கடந்த 18ஆம் தேதி 2ஆம் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில், அசாமில் 4, பீகாரில் 5, சட்டீஸ்கரில் 7, கோவாவில் 2, குஜராத்தில் 26, ஜம்மு காஷ்மீரில் 1, கருநாடகாவில் 14, கேரளாவில் 20, மகாராட்டிராவில் 14, ஒடிசாவில் 6, உத்தரப் பிரதேசத்தில் 10, மேற்கு வங்கத்தில் 5, தத்ரா மற்றும் நகர்ஹ வேலியில் 1, டாமன் அண்ட் டையூவில் 1 என 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 115 மக்களவை தொகுதிகளில் வரும் 23ஆம் தேதி 3ஆம் கட்ட தேர்தல் நடக்கிறது. அன்றைய தினம், ஒடிசாவில் உள்ள 42 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில், கேரளாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியும் அடங்கும்.

பயங்கரவாதத் தாக்குதல்களால் பலியானோர் பல மடங்கு அதிகரிப்பு

ராணுவ வீரர்களை சாகடித்த மோடி ஆட்சி!
முன்னாள் வீரர் தேஜ் பகதூர் குற்றச்சாட்டு!
வாரணாசி, ஏப். 21 பிரதமர் மோடியின் கடந்த 5ஆண்டு ஆட்சியில், இந்திய ராணுவம் சீர்குலைக்கப்பட்டு இருப்பதாக, முன்னாள் எல்லைப் பாதுகாப்புப்படை வீரரான தேஜ் பகதூர்யாதவ் குற்றம்சாட்டி யுள்ளார்.
அரியானா மாநிலம் ரேவரிமாவட் டத்தைச் சேர்ந்தவர் தேஜ்பகதூர் யாதவ். முன்னாள் எல்லைப்பாதுகாப்புப் படை வீரரான இவர்,கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரிமாதம் எல்லையில் பணியில் இருந்தபோது காணொலிக் காட்சிஒன்றை வெளியிட்டார்.
ராணுவ வீரர்களுக்குத் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது என்றும் மூத்த அதிகாரி கள் உணவுப்பொருட்களைச் சட்டவிரோத மாக விற்பனை செய்கின்றனர் என்றும் அந்த காணொலியில் தேஜ் பகதூர் குற்றம் சாட்டியிருந்தார். இந்தக்காணொலி நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தவே, தேஜ்பகதூர், பாதுகாப்புப் படையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, கொதித்தெழுந்த தேஜ் பகதூர் ராணுவத்தை சீர்குலைத்த பிரதமர் மோடியை நாடு முழுவதும் அம்பலப்படுத் தப்போவதாக அறிவித்தார். வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்துப்போட்டியிடப் போகிறேன் என்றும் கூறிய அவர், தேர்தலில் ஜெயிப்பதோ, தோற்பதோ என்னுடைய நோக்கமில்லை; ராணுவ வீரர்கள் விஷயத்தில் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது; ராணுவ வீரர்களுக்கு அவர் எதுவும் செய்யவில்லை என்பதை அம்பலப்படுத்துவதே எனது நோக்கம் என்றும் பகிரங்கமாக தெரிவித்தார்.
அந்த வகையில், மோடி அரசுக்கு எதி ராக வாரணாசியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தேஜ் பகதூர், கடந்த அய்ந்தாண்டு ஆட்சியில், இந்திய ராணுவத்தின் மதிப்பை மோடி அரசு குலைத்து விட்டதுஎன்று குற்றம் சாட்டியுள்ளார்.
நமது நாட்டில் ராணுவத்தினருக்கு என்று ஒரு தனி மரியாதை உண்டு. ஆனால், அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னரே, கடந்த 2013ஆம் ஆண்டு, ராணுவ வீரர் ஹேம்ராஜ் கொலையை, மோடி அரசிய லாக்கினார். அவர் செய்த அரசியலை நம்பிய பலர், மோடி பிரதமராகி விட்டால், நம் நாட்டின் ராணுவம் வலிமையாகும் என்று நினைத்தார்கள். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பின்னர்தான், ராணுவம் படுமோசமான நிலைக்குபோயிருக்கிறது.
மோடி, ஆட்சியில் அமர்ந்தநாள் முதல், எதிரிகளால் கொல்லப்படும் ராணுவ வீரர் களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. கடந்த ஓராண்டில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை மட்டும் எடுத் துக் கொண்டால், அது கடந்த 10 ஆண்டு களில் கொல்லப்பட்ட மொத்த வீரர்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கிறது.
அதுமட்டுமல்ல, கடந்த ஓராண்டில் தற்கொலை செய்து கொண்ட, துணை ராணுவப் படை வீரர்களின் எண்ணிக்கை மட்டும் 997 என்ற அளவிற்கு உயர்ந்திருக் கிறது. ஆனால், இவற்றை எல்லாம் ஊட கங்கள் கண்டுகொள்ளவில்லை. ராணுவத் தினருக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவது குறித்து, நான் வீடியோ மூலம் வெளியே தெரிவித்த பின்னர், ராணுவ வீரர்கள் மொபைல் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அநியா யங்களை மூடிமறைக்கவே முயற்சி நடக் கிறது. எனவே, ராணுவத்தை அரசியலாக் கிய நரேந்திர மோடிக்கு, தேர்தல் மூலமாக நாட்டு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். வாரணாசியிலும் அவரைத் தோற்கடிக்க வேண்டும். இவ்வாறு தேஜ் பகதூர் பேசி யுள்ளார்.

கையில் வைத்த ‘மை‘ அழிந்ததால், வழக்கு தொடுத்த வாக்காளர்

பெங்களூருவை சேர்ந்தவர் பிரிக்சித் தலால் (வயது 43). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் அவர் நேற்று முன்தினம் பெங்களூரு மாநகராட்சி அரசு பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.
இதற்காக அவரது கை விரலில் ஊழியர்கள் வைத்த 'மை', அவர் வீட்டுக்கு வந்து சாப்பிடுவதற்காக கையை சோப்பு போட்டு கழுவிய போது அழிந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே தான் வாக்களித்த வாக்குச்சாவடிக்கு சென்று 'மை' அழிந்தது பற்றி அங்கி ருந்த அதிகாரிகளிடம் பிரிக் சித் தலால் கூறினார். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
இதனால் காவல் நிலையத் துக்கு சென்று தேர்தல் ஆணை யத்தின் மீது அவர் புகார் கொடுத்தார். அதில், வாக்க ளித்த பின் விரலில் வைக்கப் படும் 'மை' குறைந்தது இரண்டு வாரங்கள் அழியாமல் இருக் கும். ஆனால் தனது விரலில் வைக்கப்பட்ட 'மை' உடன டியாக அழிந்து விட்டது, எனவே தேர்தல் ஆணையம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதன்பேரில், காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.