Sunday, December 11, 2011

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையும் தீர்வும் ஆவணப்படம் திரையிடல்



தலைப்பு : முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையும் தீர்வும் (42நிமிடம்)


ஆக்கம் இயக்கம் : பொறியாளர் எஸ்.ஜெயராமன் B.E.,M.I.E



தயாரிப்பு : தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம்


வரவேற்புரை : மு.அ.கிரிதரன்,மாநில அமைப்பாளர், திராவிடர் கழக கலைத்துறை

தலைமை : சு. அறிவுக்கரசு,பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

விளக்கவுரை : அ.வீரப்பன் முன்னாள் தலைமைப் பொறியாளர் தமிழ்நாடு 

பொதுப்பணித்துறை ,மாநிலச் செயலாளர், மூத்த பொறியாளர் சங்கம் 

பேராசிரியர் மு.சுப்பிரமணியம், புரவலர், நாம் தமிழ் மக்கள் பேரவை

நன்றியுரை : உடுமலை, பெரியார் வலைக்காட்சி


முல்லைப் பெரியாறு ஆவணப்படம் திரையிடல் கழக பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு பங்கேற்றார்

பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சார்பில் நடைபெற்ற மாதாந்திர திரையிடலில், நாம் தமிழ் மக்கள் பேரவையின் புரவலர் பேராசிரியர் மு.சுப்பிரமணியத்திற்கும், தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் முன்னாள் தலைமை பொறியாளர் அ.வீரப்பனுக்கும் கழகப் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு சிறப்பு செய்தார். (பெரியார் திடல் 11.12.2011) .
சென்னை, டிச.28-பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சார்பில் நடைபெறும் மாதாந்திர திரையிடலின் இந்த மாத (11.12.2011) திரையிடலுக்கு தலைமை தாங்கிய திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு அவர்கள், 1979இல் தமிழ்நாட்டின் சார்பாக மலையாளிகளும், கேரள அரசின் சார்பாக மலையாளிகளும் சேர்ந்து கேரளா மாநில நலன்பற்றி உரையாடி 152அடியாக இருந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136அடியாக குறைத்தனர் என்று குறிப்பிட்டார்.

பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கத்தில் கடந்த ஞாயிறன்று பெரியார் சுயமரியாதை ஊடகத் துறையின் சார்பில் முல்லைப் பெரியாறு பிரச்சினையும்-தீர்வும் என்ற தலைப்பில் ஆவணப்படம் திரையிடப் பட்டது.

நிகழ்ச்சிக்கு தலைமையேற்றுப் பேசிய பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு அவர்கள், முல்லைப்பெரியாறு பிரச்சினை தொடங்கிய கால கட்டத்தை பற்றி குறிப் பிடும்போதுதான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அதாவது, அப்போது, இந்தப் பிரச் சினைபற்றி தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் தரப்பில் சென்ற தலைமைப் பொறியாளர் ஜார்ஜ் மேத்யூ ஒரு மலையாளி, பொதுப்பணித்துறை பொறியாளர் உன்னி கிருஷ்ணன் ஒரு மலையாளி, மதுரை மாவட்ட ஆட்சியர் சிறீயேக் ஒரு மலையாளி, பொதுப் பணித்துறை செயலா ளர் பத்மநாபன் நாயர் ஒரு மலையாளி, ஏன் அப்போது தமிழக முதல் வராக இருந்தவரும் ஒரு மலையாளி.

இவர்கள் தான் அன்றைக்கு தமிழக அரசின் சார்பில் பேசியவர்கள்? ஒரே ஒரு வர்தான் அதில் மலையாளி இல்லை. அவர் ராஜாமுகம்மது. அவர் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அதிகாரிகள் அளவில் நடந்த ஒப்பந்தம் அது. அந்த சந்திப்பில் முதல்வர் கலந்துகொள்ளவில்லை என்று இந்த பிரச்சினையின் வரலாற்றை விளக்கியும். இந்தப் பிரச்சினையை உணர்வு பூர்வமாக அணுகாமல் அறிவுப் பூர்வமாக அணுக வேண்டும் என்றும் சுட்டிக்காட் டினார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பொதுப் பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளரும், மூத்த பொறியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளருமான ஏ.வீரப்பன் அவர்களை வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா அறிமுகம் செய்துவைத்துப் பேசினார்.

தொடர்ந்து பேசிய ஏ.வீரப்பன் தான் ஒரு பெரியார் தொண்டன் என்பதையும்,1969-1970இல் காரைக்குடியில் அறிவியக்கப் பேரவை சார்பில் பெரியாரை அழைத்து பேச வைத்ததையும், தான் அந்த அளவுக்கு உயர்ந்திருப்பதற்கு அடித்தளம் இட்டவர் தந்தை பெரியார் என்றும் நன்றியோடு நினைவு கூர்ந்தார்.பிறகு, முல்லைப்பெரியாறு அணைபற்றிய தொழில்நுட்பம் தொடர்பான செய்திகளை விளக்கிப் பேசி னார்.

பிறகு, நாம் தமிழ் பேரவையின் புரவலரும்,பேராசிரியருமான மு.சுப்பரமணி யத்தை திராவிடப் புரட்சி அறிமுகப்படுத்தி பேசினார்.அதைத் தொடர்ந்து பேசிய மு. சுப்பிரமணியம் முல்லைப்பெரியாறு தொடர்பாக ஊடகங்கள் எப்படி ஒரு சார்பாக இருக்கின்றன என்பது பற்றியும், நமது ஒற்றுமையின்மை பற்றியும் குறிப்பிட்டுவிட்டு, முல்லைப் பெரியாறு அணை Ancient Monument சட்டத்திற் குள்ளும் Heritage- வரிசையில் கொண்டு வந்து சட்டமியற்றினால் யாராலும் அணையை எதுவும் செய்துவிட முடியாது என்றார்.

இப்போது இருக்கின்ற சட்டங்களின் படியும், தீர்ப்பின்படியும், உரிமைகள் அடிப்படையிலும் அவர்களால் எதுவும் செய்துவிட முடியாது. இது போன்ற தகவல்கள் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் இறுதி, கேள்வி நேரத்திற் கென்று ஒதுக்கப்பட்டது. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறப்பு அழைப்பாளர் இருவரும் பொறுமையாகவும், பொருத்தமாயும் பதில் கூறிசிறப்பித்தனர். 42 நிமிடம் ஒடக்கூடிய இந்த ஆவணப்படத்தை தயாரித்தது தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் மூத்த பொறியாளர் சங்கம்தான்.

பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார். உடுமலை வடிவேல் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்ச்சிக்கு, பழனிகுமார், சங்கர், ஆண்டரூஸ், புருனோ, பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்யநாராயணசிங், மணியம்மை ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.

Wednesday, December 7, 2011

பெரியார் திரை குறும்படப்போட்டி 2011


பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை  பகுத்தறிவாளர் கழகம்
இணைந்து நடத்தும் பெரியார் திரை
குறும்படப்போட்டி 2011


பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து மூன்றாம் ஆண்டாக நடத்தும்  பெரியார் திரை குறும்படப் போட்டிக்காக குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

போட்டிக்கான விதிமுறைகள்:
1.    பகுத்தறிவு, பெண்ணுரிமை, சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, மதவாத எதிர்ப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப்  பிரதிபலிப்பதாக குறும்படம் இருத்தல் வேண்டும்.
2.    குறும்படம் தமிழில் எடுக்கப்பட்டதாக 30 மணித்துளிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன் (Subtitle) இருப்பின் நலம். தரமான DVD அல்லது CD வடிவில் குறும்படத்தின் இரண்டு பிரதிகள் அனுப்பப்பட வேண்டும்.
3.    ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களையும் போட்டிக்கு அனுப்பலாம். ஒவ்வொன்றிற்கும் தனித்தனி விண்ணப்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
4.    இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரமும், ஏற்கெனவே பரிசு பெற்றிருந்தால் அது பற்றிய விவரமும் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
5. குறும்படத்தின் கதைச் சுருக்கம், முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள் (Photos)  மற்றும் இயக்குநரின் ஒளிப்படம் ஆகியவை வரவேற்கப்படுகின்றன.
6.    போட்டியில் கலந்து கொள்ளுவதற்கான ஒப்புதல் கடிதம் படத்தின் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். (அல்லது) போட்டிக்காக குறும்படத்தை அனுப்புகிறவர் எந்த உரிமையில் அதனை அனுப்புகிறார் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
7.    போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் அனைத்தும் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை நடத்தும் திரையிடல் நிகழ்வுகளில் திரையிடப்படும்.
8.    குறும்படங்கள் 2009-2011 ஆம் ஆண்டுக்குள் எடுக்கப்பட்டனவாக இருக்க வேண்டும்.
9.    தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
10.    போட்டி முடிவுகள் விடுதலை, உண்மை இதழ்களிலும் பிற நாளிதழ்களிலும் செய்தியாக 2011 டிசம்பர் இறுதி / 2012 ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும்.
11.    ஆவணப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
12.    தேர்வு செய்யப்படாத குறும்படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது.
13.விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை www.viduthalai.in,  www.periyarthirai.blogspot.com         ஆகியவற்றில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.
14.    போட்டியில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை.
15. போட்டிக்கு குறும்படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி : டிசம்பர் 10, 2011.



முதல் பரிசு: ரூ.10,000
இரண்டாம் பரிசு: ரூ. 5,000
மூன்றாம் பரிசு: ரூ. 3,000
Download Application
மேலும் தொடர்புகளுக்கு:
செல்பேசி: 9444210999, 9940489230
periyarthirai@gmail.com
www.viduthalai.in, www.periyarthirai.blogspot.com