Tuesday, October 1, 2019

கேரளம்: எழுத்தறிவுத் தேர்வில் 3,000 பழங்குடியினர் தேர்ச்சி

கேரளத்தில் நடைபெற்ற எழுத்தறிவுத் தேர்வில் 2,993 பழங்குடியினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 85 வயது மூதாட்டியும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி, கேரளத்தில்  93.91 சதவீத மக்கள் எழுத்தறிவு பெற்று விளங்கினர். இதை 100 சதவீதமாக்க கேரள மாநில அரசு முயற்சி களை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, மாநில எழுத்தறிவு ஆணையம் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் எழுத்தறிவு பெறுவதற்கான வகுப்புகளையும், தேர்வினையும் இந்த ஆணையம் நடத்தி வருகிறது. முக்கியமாக, பழங்குடியினர், மீனவர்கள், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோருக்கு எழுத்தறிவு அளிக்க இந்த ஆணையம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், வயநாடு மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள மக்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் எழுத்தறிவு வகுப்புகள் நடத்தப்பட்டு, அண்மையில் தேர்வு நடத்தப்பட்டது.
இத்தேர்வு 100 மதிப்பெண்களைக் கொண்டதாக இருந்தது; படிக்கும் திறனுக்காக 30 மதிப்பெண்களும், எழுத்துத் திறனுக்காக 40 மதிப்பெண்களும், கணித அறிவுக்காக 30 மதிப்பெண்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. இத்தேர்வில் தேர்ச்சி பெற 30 மதிப்பெண்கள் பெற வேண்டியது கட்டாயமாகும்.
இத்தேர்வில் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த 3,090 பழங்குடியினர் பங்கேற்றனர். அவர்களில் 2,993 பேர் தேர்ச்சி பெற்றதாக எழுத்தறிவு ஆணையம் தெரிவித்துள்ளது. அவர்களில் 85 வயது மூதாட்டியும் ஒருவர் ஆவார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.