Saturday, September 21, 2019

கல்வி நிலையங்களில் ஜாதிப் பாகுபாடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

கல்வி நிலையங்களில் ஜாதிப் பாகுபாட்டுடன் மாணவர்கள் நடத்தப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி தாக்கல் செய்யபட்ட மனுக்கள் மீது 4 வாரங்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அய்தராபாதில் உள்ள மத்திய பல்கலைக்கழக்கத்தில் ஆராய்ச்சி படிப்பை படித்து வந்த மாணவர் ரோகித் வேமுலா, ஜாதிய பாகுபாடு காரணமாக, கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல், மும்பையில் உள்ள தோபிவாலா தேசிய மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி பாயல் தாத்வியை 3 மருத்துவர்கள் ஜாதிய ரீதியில் துன்புறுத்தியதால், அவர் கடந்த மே மாதம் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், உயர்கல்வி நிலையங்களில் நிலவும் ஜாதிப் பாகுபாட்டுக்கு முடிவுகட்ட வலியுறுத்தி ரோகித் வேமுலாவின் தாயாரும், பாயல் தாத்வியின் தாயாரும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.வி.ரமணா, அஜய் ரஸ்தோகி ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் முன்வைத்த வாதம்:
ஜாதிப் பாகுப்பாட்டுடன் நடத்தப்படுவதால், பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. கல்லூரி வளாகத்துக்குள் மாணவ, மாணவியர்களை ஜாதிப் பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்று பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளை வகுத்துள்ளது. ஆனால், அவை அமல்படுத்தப்படவில்லை. எனவே, கல்வி நிறுவனங்களில் வாழ்வுரிமை, சமத்துவ உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை அளிக்க வேண்டும் என்று இந்திரா ஜெய்சிங் வாதிட்டார். அதைத் தொடர்ந்து, இந்த மனுக்கள் மீது 4 வாரங்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.