Wednesday, September 25, 2019

வழிகாட்டுகிறது ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம்

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல்களுக்கு இருக்கும் பரபரப்பிற்கு சிறிதும் குறையாதது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் மாணவர் தலைவர்களுக்கான தேர்தல்கள் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை. சில பல சச்சரவுகளுக்கு மத்தியில் தேர்தல்கள் நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன.
இம்முறை நடைபெற்ற தேர்தலில் யுனைட்டட் லெஃப்ட் பேனல் முற்றிலுமாக வெற்றியை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டார்கள். அப்பல்கலைக்கழக தலைவராக ஆயிஷ் கோஷ் தேர்வு செய்யப்பட்டார். 13 வருடங்களில் எஸ்.எஃப்.அய். எனப்படும் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு 2006-2007 ஆண்டுகளில் தனஞ்ஜெய் திரிபாதி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவராக செயல்பட்டார்.
மொத்தம் பதிவான 5728 வாக்குகளில் கோஷ் 2,313 வாக்குகள் பெற்றார். துணைத் தலைவர் பதவியை டெமோக்ரெடிக் ஸ்டூடண்ட்ஸ் ஃபெடரேஷன் அமைப் பைச் சேர்ந்த சகேத் மூன் வென்றார். மொத்தம் 3,365 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரிகளின் மாணவ அமைப்பைச் சேர்ந்த (ஏபிவிபி) ஸ்ருதி அக்னிஹோத்ரி பெற்றிருந்த வாக்குகளை விட 2.5 மடங்கு வாக்குகள் அதிகமாய் பெற்று வெற்றியை பதிவு செய்தார் சகேத் மூன்.
அனைத்திந்திய மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த (All India Students' Association (AISA)) சதீஷ் சந்திர யாதவ் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அவர் பெற்ற வாக்குகள் 2,518 ஆகும். அதே போன்று கூடுதல் செயலாளராக முகமது டானிஷ் 3,295 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் ஆல் இந்தியா ஸ்டூடெண்ட்ஸ் ஃபெடரேஷனை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நான்கு பதவிகளில் ஒன்றைக் கூட வலதுசாரி மாணவ அமைப்புகள் பெறவில்லை.
ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில்  எஸ்.எஃப்.அய். சங்கத்தினைச் சேர்ந்த மாணவர்கள் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றியை உறுதி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஜெ.என்.யூ பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. 2012ஆம் ஆண்டு அந்த தடை நீக்கப்பட்ட பின்பு, ஆல் இந்தியா ஸ்டூடெண்ட்ஸ் அசோசியேசன் மிகப்பெரிய அளவில் அங்கு வேர் ஊன்ற ஆரம்பித்தது. 2015ஆம் ஆண்டில் இருந்து எஸ்.எஃப்.அய் மற்றும் ஆல் இந்தியா ஸ்டூடெண்ட்ஸ் அசோசியேசன் கூட்டணியாக தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
ஆயிஷ் கோஷ் மேற்கு வங்கத்தைச்  சேர்ந்தவர். டில்லி பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த அவர் இண்டெர்நேசனல் ரிலேசன்ஸ் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே பாடப்பிரிவில் தற்போது இரண்டாம் ஆண்டு எம்.ஃபில் படித்து வருகிறார். 6ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 8ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இரண்டு மாணவர்கள் இந்த தேர்தலுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படக் கூடாது என டில்லி உயர்நீதிமன்றம்  அறிவித்திருந்த நிலையில்,  அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பின்னர் தேர்தல் குழு முடிவுகளை அறிவித்தது.
கடந்த தேர்தலை விட 5% அதிக வாக்குகளை இடதுசாரி அமைப்புகள் பெற்று 50.15% என்ற அளவில் வாக்கு வங்கியை இந்த தேர்தலில் உறுதி செய்துள்ளனர். இம்முறையும் போட்டியிட்ட அனைத்துப் பதவிகளிலுமே ஏபிவிபி அமைப்பு தோல்வியை சந்தித்துள்ளது.
இந்தியாவின் தலைநகரம் இந்த வகையிலே வழிகாட்டியிருக்கிறது. அதிகார பலம், பண பலம் எல்லாம் இருந்தும்,  பிஜேபி ஆர்.எஸ்.எஸின் மாணவர் அமைப் பான ஏபிவிபி சார்பில் போட்டியிட்டவர்கள் தோற்கடிக் கப்பட்டுள்ளது நல்ல நம்பிக்கையை அளிக்கிறது.
இதன் பொருள் சமூகநீதி, மதச் சார்பின்மை என்னும் திசையில் மாணவர்கள் கம்பீரமாக நடைபோடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வகையில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது. வெற்றி பெற்ற இடதுசாரி மாணவர்களுக்குப் பாராட்டும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.