Friday, September 13, 2019

கீழடியில் 6-ஆம் கட்ட அகழாய்வு நடத்துவதற்கான இடம் தேர்வு




சிவகங்கை, செப்.13 சிவகங்கை மாவட்டம் திருப்பு வனம் அருகே கீழடியில் புவி காந்தவியல் ஈர்ப்புக் கருவி மூலம் 6-ஆம் கட்ட அகழாய்வு நடத்துவதற்காக இடம் தேர்வு செய்யும் பணி வியாழக் கிழமை தொடங்கியது.

கீழடியில் மத்திய தொல் லியல் துறை நடத்திய 3 கட்ட அகழாய்வுகள் மூலம் 7,818 தொல்பொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டன. நான்காம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல்துறை மேற்கொண்டதில் 5,820 தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

தற்போது தமிழக அரசு சார்பில் 5-ஆம் கட்ட அகழாய்வு தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில், இதுவரை 5 பேர்களின் நிலங்களில் 33 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், சுடுமண் சிற்பங்கள், இரும்பு பொருள்கள், செப்புக் காசுகள், உணவுக் குவளை, தண்ணீர் கோப்பை, சூதுபவளம், எழுத்தாணி உள்பட 700-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும் இரட்டை, வட்டச் சுவர், கால்வாய், தண்ணீர் தொட்டி, உறை கிணறுகளும் கண்டெடுக்கப் பட்டன. 5-ஆம் கட்ட அகழாய்வு இம்மாத இறுதியில் முடிவடைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக தொல்லியல்துறை சார்பில் 6-ஆம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என தொல்லியல்துறை ஆணையர் உதயச்சந்திரன் தெரிவித் திருந்தார்.

இந்நிலையில், 6-ஆம் கட்ட அகழாய்வுக்கான இடம் தேர்வு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. மும்பை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஜியோமேக்னடிசம் (அய்அய்ஜி) நிறுவனத்தைச் சேர்ந்த 3 தொல்லியல் ஆய்வாளர்கள் புவி காந்தவியல் ஈர்ப்புக் கருவி மூலம் இந்தப் பணியை மேற்கொண்டனர்.

புவி காந்தவியல் ஈர்ப்புக் கருவி மூலம் பூமிக்கடியில் எந்தெந்த இடங்களில் தொல் பொருள்கள் இருக்கின்றன என்பதை துல்லியமாகக் கண்டறிய முடியும். இதன்மூலம் சரியான இடத்தை தேர்வு செய்து அகழாய்வை தொடங்க முடியும் என தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடும்ப அட்டையில் திருத்தங்கள்:

சென்னையில்  குறைதீர் முகாம்

சென்னை, செப்.13 குடும்ப அட்டையில் திருத்தங்களைச் செய்வதற்கான குறைதீர் கூட்ட முகாம்கள் சென்னையில் நாளை சனிக்கிழமை (செப். 14) நடைபெறவுள்ளது. இதுகுறித்து, தமிழக உணவுத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல், பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நிகழ் மாதத்துக்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.

சென்னையில் உள்ள 17 மண்டல உதவி ஆணையர் அலுவலகங் களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கூட்டம் நடைபெறுகிறது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் செல்லிடப்பேசி எண் பதிவு செய்தல் போன்ற மாற்றங்களை குறைதீர் முகாம்களின் போது தெரிவிக்கலாம். மேலும், உணவுப் பொருள் வழங்கல் துறையுடன் நுகர்வோர் பாது காப்பும் இணைவதால், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் அல்லது சேவையில் குறைபாடுகள் குறித்த புகார்கள் இருந்தாலும் தெரிவிக்கலாம் என்று தமிழக உணவுத் துறை கூறியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை அருகே அனுமதியின்றி வைத்த பதாகை விழுந்து இளம்பெண் உயிரிழப்பு


சென்னை,செப்.13, சென்னை பள்ளிக்கரணை அருகே அனுமதியின்றி வைத்த பதாகையால் விபத்து ஏற்பட்டு சுபசிறீ என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக பதாகை வைத்தவர்கள் மீது பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவனக்குறைவாக செயல்பட்டு மரணம் விளைவித்தல், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் குற்றம் செய்தது பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக தண்ணீர் லாரி ஓட்டுநர் ஜேக்கப் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த சுபசிறீ என்ற 23 வயது பெண் கனடா செல்வதற்காக நேற்று தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதி முடித்துவிட்டு பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சாலையின் ஓரத்தில் வைத்திருந்த பதாகை சரிந்து அவர் மீது விழுந்தது. அதனால், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது வந்த தண்ணீர் லாரியில் சிக்கி படுகாயமடைந்தார். காயமடைந்த அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். சம்பவம் நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்திவ ருகின்றனர். சுபசிறீ குடும்பத்துக்கு ஒரே பெண்ணாக இருந்துள்ளார். அரசியல் மற்றும் குடும்பக் காரணங்களுக்காக பதாகை வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி இந்த பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி எதிர்பார்ப்பைவிட மெதுவாக உள்ளது : அய்எம்எப் கருத்து

புதுடில்லி,செப்.13 இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி எதிர்பார்ப்பை விட மெதுவாக உள்ளதாக பன்னாட்டு நிதியமான அய்எம்எப் கருத்து தெரிவித்துள்ளது.

சில வங்கி சாரா நிதி நிறுவனங்களின் நீடிக்கும் பலவீனமும் மந்த நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது என்றும், நிறுவனங்கள், சுற்றுச் சூழலுக்கான விதிகளில் நிச்சயமற்ற தன்மை எதிர்மறை விளைவை ஏற்படுத்தியுள்ளதாக அய்எம்எப் கருத்து தெரிவித்துள்ளது.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.