Wednesday, September 18, 2019

வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்வு

வருங்கால வைப்பு நிதிக் கணக்குகளுக்கு (பிஎஃப்) கடந்த நிதியாண்டுக்கு 8.65 சதவீத வட்டி வழங்கப்படும் என மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்தார்.
டில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர் களிடம் மேலும் கூறியதாவது:
கடந்த 2018-19ஆம் நிதியாண்டுக்கு வருங்கால வைப்பு நிதிக்கு 8.65 சதவீத வட்டி வழங்கும் திட்டத்துக்கு, இபிஎஃப்ஓ உறுப்பினர்களின் மத்திய குழு  நடப்பாண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
பின்னர் இந்தத் திட்டம்  நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  இன்னும் ஒரு சில தினங்களில் இதற்கான ஒப்புதல் நிதி அமைச்சகத்திடமிருந்து கிடைத்து விடும். அதன்பிறகு, கடந்த நிதியாண்டுக்கு வருங்கால வைப்பு நிதிக்கு 8.65 சதவீத வட்டி சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.
கடந்த 2017-18 நிதியாண்டில் வருங்கால வைப்பு நிதிக்கு 8.55 சதவீத வட்டி மட்டுமே வழங்கப்பட்டது. இந்த நிலையில், 2018-19 நிதியாண்டுக்கு கூடுதலாக 0.10 சதவீத வட்டியைப் பெறுவதன் மூலம் இபிஎஃப்ஓவில் சந்தாதாரர்களாக உள்ள 6 கோடி பேர் பயனடைவார்கள் என்றார் அவர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.