Thursday, November 7, 2019

அதிமுக அரசின் நிலைப்பாடு என்ன?

திருவள்ளுவருக்கு காவி ஆடை போர்த்தி நெற்றியிலும், கைகளிலும் திருநீற்றுப் பட்டை போட்டு ஒரு சர்ச்சையை அதிகாரப் பூர்வமாக பா.ஜ.க. தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு அவமானப்படுத்தியிருக்கிறதே - இதுகுறித்து ஆளும் அண்ணா திமுகவின் நிலைப்பாடு என்ன?
அதிமுகவை நோக்கிய கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை என்ன?
1) திருக்குறள்  எல்லா மதங்களையும் கடந்த அறநெறி நூல் என்பதில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு உடன்பாடு உண்டா இல்லையா?
2) திருக்குறள் ஒரு இந்து மத நூல் என்று சாதிக்க முற்படும் பா.ஜ.க.வின் நிலைப்பாடு பற்றி என்ன கருத்து?
3) திருக்குறளுக்கு திராவிட இயக்கம் ஒன்றும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்கிறதா?
4) 'தீக்குறளைச் சென்றோதோம்' என்ற ஆண்டாளின் பாசுரத்திற்கு 'தீய திருக்குறளை ஓத மாட்டோம்' என்று காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சொன்ன தெல்லாம் தெரியுமா? தெரிந்தால் பதிலடி கொடுத்திருக்க வேண்டாமா?
5) அதிமுக அமைச்சரவையில் உள்ள அமைச்சரான மாபா. பாண்டியராஜன் என்பவர் "திருவள்ளுவர் எல்லா மதங்களுக்கும் சொந்தக்காரர் - அதனால் எந்த மதக்காரர்களும் தங்கள் அடையாளத்தை அவர்மீது சாத்தலாம்; திருவள்ளுவர் நாத்திகர் அல்லர்" என்று கூறியுள்ள கருத்து அதிமுகவுக்கு உடன்பாடுதானா? உடன்பாடு இல்லையென்றால் கட்சியின் சார்பில் ஏன் மறுப்புத் தெரிவிக்கவில்லை?
6) திருவள்ளுவர் பெயரில் ஒரு மதச் சர்ச்சையை உண்டாக்கிக் குளிர் காயலாம் என்ற பா.ஜ.க.வின் சூட்சமம் ஆளும் அதிமுக அரசுக்குத் தெரியுமா  - தெரியாதா?
7) தஞ்சையையடுத்த பிள்ளையார்ப்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைமீது சாணி வீசியவர்களைப் பிடிக்க கால தாமதம் ஏன்?
8) உணர்ச்சிப் பூர்வமான மனநிலை மக்கள் மத்தியில் நிலவும் ஒரு சூழ்நிலையில் காவல்துறை நிறைந்திருக்கும் பிள்ளையார்பட்டியில்  இந்து மக்கள் கட்சிக்காரர்கள் படிக் கட்டுகள் மூலம் திருவள்ளுவர் சிலை பீடத்தில் ஏறி அபிஷேகம் செய்ததும், உருத்திராட்ச மாலை அணிவித்ததும் எப்படி? அதனை அனுமதித்தவர்கள் யார்? யார்?
9) அது இருக்கட்டும், இந்த செயலை செய்ததற்காக அவரை மூன்று குற்றப் பிரிவுகளின் அடிப்படையில் கைது செய்து, உடனே விடுவித்தது ஏன்? அரசியல் தலையீடா?
10) மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் தொங்கு சதையாக பின்னிப் பிணைந்தநிலையில் பா.ஜ.க.வோ, சங்பரிவாரோ எது செய்தாலும் கண்டு கொள்வதில்லை என்று அதிமுக அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்து விட்டதா?
11) அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், கட்சிக் கொடியிலும் வைத்துள்ள அண்ணா திமுக அண்ணாவின் கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டு விட்டு அல்லது வேண்டுமென்றே புறக்கணித்தது வெட்கக் கேடு அல்லவா? சரியானது தானா?
12) தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும், திராவிட இயக்கத்தையும் சங்பரிவார் கொச்சைப்படுத்தும் போது, இழிவுபடுத்திப் பேசும்போது, எழுதும்போது அவற் றைக் கண்டு கொள்ள மறுப்பது ஏன்? பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைகள் முற்றிலும் துடைத்து எடுக்கப் பட்ட கட்சியாக அதிமுக உருக்குலைந்து போய் விட்டதா?
13) அய்யா, அண்ணா கொள்கைகள், திராவிட இயக்கக் கோட்பாடுகள் இவை சற்றும் இல்லாமலும் வெறும் பதவிப் பசி கட்சியாக மாறிப் போய் விட்டதா அதிமுக?
14) பா.ஜ.க.வோடு ஒட்டி உறவாடுவதால் சிறுபான்மை யினருக்கு எதிரானது அதிமுக என்ற எண்ணம் பொதுவாக ஏற்பட்டிருப்பதை அதிமுக உணர்ந்துள்ளதா?
15) பகுத்தறிவுச் சிந்தனையோடும், இனமான உணர்வோடும் இருக்கக் கூடிய ஒரே ஒருவர்கூட இல்லாது - அற்றுப் போன கூடாரமாக அஇஅதிமுகவைக் கருதலாமா?
இதுபோன்ற கேள்விகள் இன்னும் இருக்கத்தான் செய் கின்றன. இவற்றைப் பற்றி எல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படாத, அக்கறை செலுத்தாத இந்தக் கட்சி அண்ணா பெயரையும், அவரது உருவத்தையும் நீக்கி விடுவதுதானே மரியாதை?
அண்ணா திமுகவில் திராவிட இயக்கவுணர்வும், இனவுணர்வும், பகுத்தறிவுச் சிந்தனையும் உள்ள ஒரே ஒருவர் இருந்தால்கூட, இந்த வினாக்களை கட்சி மட்டத்தில் எழுப் பினால், அத்தகைய ஒருவரை எந்தளவு வேண்டுமானாலும் பாராட்டி மகிழலாம்.
எங்கே பார்ப்போம்?

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.