Wednesday, October 9, 2019

வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் - தீர்ப்பும்

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடு மைச் சட்டம் தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த சீராய்வு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,தனது முந்தைய உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடு மைச் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பாதிக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் புகார் அளித்தால், உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், தீவிர விசாரணைக்குப் பின்பே கைது செய்ய வேண்டும் என்றும், குற்றம் சாட்டப்பட்டோர் முன் ஜாமீன் பெறுவதற் குரிய அம்சங்களை அறிமுகப்படுத்தியும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி இந்தத் தீர்ப்பை வழங்கியது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வன்கொடு மைச் சட்டத்தால் அப்பாவிகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் இந்தத் தீர்ப்பை வழங்கியதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. எனினும், இந்தத் தீர்ப் பானது, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வன் கொடுமைச் சட்டத்தின் கடுமையான பிரிவுகளை நீர்த்துப் போகச் செய்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விவகாரத்தை முன்வைத்து, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின அமைப்புகள் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறையில்
10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து, தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. எனினும், தங்களது தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் விரிவான பதிலைத் தாக்கல் செய்யு மாறு மத்திய அரசுக்கும், மற்ற மனுதாரர்களுக்கும் உத்தர விட்டனர்.
இந்நிலையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வன்கொடுமைச் சட்டத்தில் கடுமையான பிரிவுகளை மீண்டும் இடம்பெறச் செய்வதற்கு வழிவகுக்கும் புதிய மசோதாவை, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறி முகம் செய்தது. அதைக் கடந்த மழைக்காலக் கூட்டத் தொடரில் ஆகஸ்ட் 9ஆம் தேதி நிறைவேற்றியது.
ஆனால், மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யு.யு. லலித் ஆகியோர் இந்த வழக்கில் தீர்ப்பளித்தனர். அதில், "தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வன்கொடுமைச் சட்டம் குறித்த எங்களின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உத்தரவிடுகிறோம். அடுத்த வாரம் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் வழக்கு செல்லும்" எனத் தீர்ப்பளித்தனர்
இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற  தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி, அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஷ்ரா, வினீத் சரண், ரவீந்திர பட் ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. அப்போது, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர் பாக உச்ச நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த உத்தரவின் சில அம்சங்களை திரும்பப் பெறுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதாவது, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்தாலே குற்றம்சாட்டப் பட்டவரை கைது செய்யக்கூடாது என்ற முந்தைய உத்தரவை திரும்பப் பெற்றுள்ளனர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்தாலே கைது செய்ய சட்டத்தில் இடம் உள்ளது என்று நீதிபதிகள் கூறினர்.
“தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் இன்னும் தீண்டாமையை எதிர் கொள்கிறார்கள். சமூக ரீதியாக ஒதுக்கி வைக்கப்படு கிறார்கள். சம உரிமைக்கான அவர்களின் போராட்டம் இன்னும் முடிந்தபாடில்லை” என்றும் நீதிபதிகள் குறிப் பிட்டனர்.
சட்ட அமலாக்கத்தில் எங்கோ ஓரிடத்திலே தவறு நடக்கிறது என்று கூறி, சமுதாயத்தில் மிகக் கேவலமான தீண்டாமைக் கறையைக் காப்பாற்ற முயலக்கூடாது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

Tuesday, October 8, 2019

‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ தலையங்கம்

தேசத் துரோக வழக்கு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்!

இந்திய ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்காதீர்!

சென்னை,அக்.8, 'போதும் போதும்; பட்டது போதும்' என்ற தலைப்பில் 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஆங்கில நாளேடு எழுதியுள்ள தலையங்கத்தில், தேசத்துரோக வழக்கு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்; இந்திய ஜனநாயகத்தைக் கேலிக் குரியதாக்கி விடாதீர்கள்' என்று குறிப்பிட்டுள்ளது.
'போதும் போதும்' என்ற பொதுத் தலைப்பிலும், 'முன்னணி அறிவு ஜீவிகள் 49 பேர் மீதான அற்பத்தன மான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும்' என்பதோடு இந்திய ஜனநாயகத்தைக் கேலிக்குரியதாக மாற்றி விடாதீர்கள்' என்கிற துணைத்தலைப்புகளுடனும் நேற்று 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' (7.10.2019) ஆங்கில நாளேட்டில் வெளியான தலையங்கம் வருமாறு:
இந்தியா சுதந்திர மடைந்து 72 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அற்பமான அர்த்தமற்ற மிகக் கொடூரமான காலனி ஆதிக்கச் சட்டத்தைப் போன்ற தேசத் துரோக வழக்கைப் பிரயோகித்திருப்பதன் மூலம், நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை வகித்து செயல்பட்ட காந்தியாருக்கு எடுத்த உயர்தர விழாக்கள் எல்லாமே வீணாக அர்த்தமற்றதாகி விட்டன.
கும்பல்களின் வன்முறை மற்றும் கொலைக் குற்றங்கள் நாட்டில் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்து, சிந்தனையாளர்கள், கலைத்துறை வல்லுநர்கள் உள்ளிட்ட பல்துறை முன்னணி யினர் பிரதமருக்கு கடிதம் எழுதிய தற்காக நாட்டின் அமைதியைக் கெடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, தேசத்துரோக வழக்கு மீண்டும் புனையப் பட்டுள்ளது.
தேசத்துரோகம் பற்றி நேரடியாக அர்த்தம் காணவும், கலவரத்தை உடனடியாகத் தூண்டிவிடுவது பற்றியும் உச்சநீதிமன்றம் அதற்கான எல்லை பற்றியும் முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், நடைமுறையில் இந்தியக் குடிமக்கள் அதுபற்றி பொதுவாகவே கேள்வி எழுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஜனநாயகரீதியில் கருத்துகளை வெளியிடுவதற்கு அனுமதி தரலாம். அடிப்படை உரிமை தொடர்பான சட்டங்களான தேசத்துரோக சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் வரலாற்றுக் குப்பைகளில் தூக்கி எறியப்பட வேண்டும்.
அந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான எழுத்தாளர் அமித் சவுத்ரி, "அடிப்படை உரிமைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இதுவரை எந்தத் தகவலுமில்லை; இந்திய ஜனநாயகம் முடிவிற்கு வந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட வில்லை'' என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கடிதத்தில் கையொப்பமிட்டவர்கள்மீது முசாபர்பூர் தலைமை நீதித்துறை மாஜிஸ்டிரேட் சூர்யகாந்த் திவாரி எந்த வகையில் வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கி இருக்கிறார். சட்டத்தையும் அடிப்படை உரிமைகள் பற்றியும் எப்படி அவர் புரிந்து கொண்டிருக்கிறார். இதுபோன்ற புகார்களும் முதல் தகவல் அறிக்கைகளும் இருப்பது புரியாத புதிராக உள்ளன.
நாட்டின் உருவத்தையே சிதைத்து விட்டார்கள் என்பதுதான் கையெழுத்திட்ட அந்த வல்லுநர்கள்மீதான விநோதமான குற்றச்சாட்டு. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்வதில்தான் மிகப்பெரும் பெருமிதமும் பெருமையும் உள்ளது. எனவேதான் அது பாகிஸ்தானிடம் இருந்து வேறுபட்டு இருக்கிறது. சர்வதேச அளவில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பெருமளவில் முயற்சி மேற்கொண்டுவரும் பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா தனித்திருக்க அதன் ஜனநாயக அமைப்பே காரணம்.
அப்படிப்பட்ட நிலையில், ஜனநாயக ரீதியில் கருத்துகளை வெளியிட்டதற்காக, அமைதியை குலைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, தேசத்துரோக வழக்கை சுமத்தி இருப்பது, இந்திய ஜனநாயகம் கேலிக்குரியதாகிற நிலை உள்ளது. இதற்கு மேலும் இந்த நாட்டின் கவுரவத்தைக் கெடுக்க முடியாது. பாகிஸ்தானுடன் ஒத்துப்போவதில் வெற்றி பெற்றதாக மாறிவிடக் கூடும்.
இந்தப் பிரச்சினையில் தன்னுடைய உறுதியான நிலையை அரசு தெளிவாகக் குறிப்பிட வேண்டும். கீழமை நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து உயர்நீதித்துறையினர் தாமாக முன்வந்து விசாரித்து அந்த உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அண்மைக்கால வரலாற்றில் தவறாகப் பயன்படுத்தப்படும் தேசத்துரோக வழக்கு பற்றி அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளதை முழுவதுமாக உச்சநீதிமன்றம் வெளிப் படையாக மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே கருத்தை எதிரொலிக்கும் வகை யில், 'தி இந்து', 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேடுகளிலும் தலையங்கங்கள் வெளியாகி உள்ளன.

மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு: மூவர் தேர்வு!

மனித உடல் செல்கள் குறித்த ஆய்வு மேற் கொண்ட 3 நபர்களுக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற் பியல், பொரு ளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
இந்நிலையில், 2019ஆ-ம் ஆண்டு மருத்துவத்துக் கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டோக் ஹோமில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி மருத்துவ ஆராய்ச்சி யாளர்கள் வில்லியம் ஜி,கெலின், சர் பீட்டர் ரேட்கிளிஃப், கிரேக் எல். செமன்சா ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங் கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள் ளது.
மனித உடல் கிடைக் கும் ஆக்ஸி ஜனின் அளவை பொறுத்து செல் களை எவ்வாறு தகவ மைத்து கொள்கிறது என் பதை கண்டு பிடித்த தற்காக இந்த 3 மருத்து வர்களுக்கு நோபல் பரிசு பகிர்ந் தளிக்கப்பட உள்ளது.

அரசு பங்களாக்களை இன்னும் காலி செய்யாத 50 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு பங்களாக்களை காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்ட நிலையில், சுமார் 50 பேர் இன்னும் அந்த பங்களாக்களை காலி செய்யாமல் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அவர்களை விரைவில் வெளியேற்ற, அரசு கட்டட (அங்கீகாரம் இன்றி குடியிருத்தல்) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முனைந்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, தங்களது பதவிக் காலம் முடிந்த பிறகும் டில்லி லுட்டியன் பகுதியில் உள்ள அரசு பங்களாக்களில் குடியிருந்த 200-க்கும் மேற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு வாரத்துக்குள்ளாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று சி.ஆர். பாட்டீல் தலைமையிலான அரசு இல்லங்கள் ஒதுக்கீட்டுக் கான நாடாளுமன்றக் குழு கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி உத்தரவிட்டது.
மேலும், அந்த பங்களாக்களுக்கான மின்சாரம், குடிநீர், சமை யல் எரிவாயு இணைப்புகளை 3 நாள்களுக்குள் துண்டிக்குமாறும் உத்தரவிட்டது.
இதையடுத்து பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த பங்காளக்களை காலி செய்துவிட்டனர். எனினும், சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு பங்களாவை காலி செய்யாமல் உள்ளனர்.
இதுதொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், "சுமார் 50 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் குடியிருக்கும் அரசு பங்களாவை இன்னும் காலி செய்யவில்லை. அடுத்த சில நாள்களில் அவர்கள் பங்களாவை காலி செய்யாவிட்டால், கட்டாயமாக வெளியேற்றுதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்று தெரிவித்தன.
விதிகளின்படி, ஒரு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாதத்துக்குள்ளாக தாங்கள் குடியிருக்கும் அரசு பங்களாக்களில் இருந்து வெளியேற வேண்டும்.
16ஆவது மக்களவையை கலைப்பதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த மே 25-ஆம் தேதி பிறப்பித்தார். சுமார் 5 மாதங்களை நெருங்கி விட்ட போதிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசு பங்களாவை காலி செய்யாமல் உள்ளனர்.

500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்றூண் கண்டெடுப்பு

கொடைக்கானல் மலைப்பகுதி யில் காலப்போக்கில் புதைந்து போனதாகக் கூறப்படும் அரை யப்பட்டி கிராமத்தில் கண் டெடுக்கப்பட்ட நுழைவுவா யில் தூணும் அடுக்கம் கிரா மத்திலுள்ள கல்தூணும் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே காலகட்டத்தில் உருவாக்கப் பட்டவை என்பதை தொல்லி யல்துறையினர் உறுதி செய் துள்ளனர்.
கொடைக்கானல் மலைப் பகுதிகளான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, அடுக்கம், பேத் துப்பாறை, பூம்பாறை, செண் பகனூர் பைரவர் கோயில் பகுதிகளில் ஆதிமனிதர்கள், பூர்வ குடிமக்கள் வாழ்ந்ததற் கான ஆதாரங்கள் கண்டறியப் பட்டன. அடுக்கம் கிராம வனப்பகுதிக்குள், காலப்போக் கில் புதையுண்ட அரையபட்டி கிராமம் சமீபத்தில் தொல்லி யல் ஆய்வாளர்கள் குழுவால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.
அந்த கிராமம் தங்கள் மூதாதையர் வாழ்ந்த கிராமம் என்று கூறி அங்கிருந்த நடு கல்லை எடுத்து வந்து அடுக்கம் கிராம மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கூறப்படும் அந்த தூணை ஆய்வு செய்த தொல் லியல்துறை அதிகாரிகள், அரையப்பட்டி கிராமத்தின் கல்தூணும், அடுக்கம் கிராமத் தின் தூணும் ஒரே காலகட் டத்தில் உருவாக்கப்பட்டதை உறுதி செய்துள்ளனர்.

காந்தியின் 'அஸ்தி'மீது கூட கோபமா?

காந்தியாரின் 150ஆவது பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதியில் மத்தியப் பிரதேசத்தில் அவருடைய 'அஸ்தி'யை சிலர் திருடிச் சென்றதோடு, அவருடைய சிலை அருகே 'தேசத்துரோகி' என எழுதியும் வைத்துள்ளனர்.
காந்தி இறந்த பிறகு சபர்மதி நதிக்கரையில் எரியூட்டப்பட்ட அவரது உடலின் சாம்பல் ('அஸ்தி') இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நினைவுச்சின்னமாக வைக்கப்பட்டுள்ளது,  அதில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டத்தில் லட்சுமண் பாக் என்ற பகுதியில் காந்தியின் சாம்பல் கண்ணாடிப் பேழைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த சாம்பலுக்கு மத்தியப்பிரதேச ரேவா மாவட்ட ஆட்சியர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் காந்தியின் பிறந்த நாள் மற்றும் அவரது நினைவு நாளில் மரியாதை செலுத்துவார்கள்.
காந்தியின் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் நாடு முழுவதும் இந்திய அரசின் சார்பிலும், அனைத்து மாநிலங்களின் சார்பிலும் கொண்டாடப்பட்டது. ரேவா மாவட்டத்திலும் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு ரேவா மாவட்ட காங்கிரஸ் தலைவர் குர்மீத் சிங், காந்தி சாம்பல் வைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது காந்தியின் நினைவிடத்தில் காந்தி சாம்பல் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடியை உடைத்து சாம்பல் வைக்கப்பட்டிருந்த கலசத்தை தூக்கிச்சென்றுள்ளது தெரிய வந்தது.
மேலும் அந்த இடத்தில் "காந்தி ஒரு தேசத்துரோகி" என்று எழுதிவைத்துள்ளனர். மேலும் அங்கிருந்த காந்தி படத்தினையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர். இதைக் கண்ட அவர் காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். இதனை அடுத்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது 153, 504 மற்றும் 505 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட காவல்துறை ஆணையர் அபித் கான் கூறும் போது, "நாங்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவருகிறோம். குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம்" என்று கூறினார்.
காந்தி 'அஸ்தி' திருட்டு தொடர்பாக கருத்து தெரிவித்த காந்தியின் பேரனின் மகன் துசார் காந்தி "யாரோ சிலர் காந்தியின் 'அஸ்தி'யை திருடி சென்று விட்டனராம், மேலும் அங்கு காந்தி ஒரு தேசத்துரோகி என்று எழுதி வைத்துச் சென்று விட்டார்களாம், அவர்களுக்கு காந்தி 'மகாத்மா'வாக தெரியவில்லை. தேசப் பிதாவாகத் தெரியவில்லை, அது யாரோ ஒருவரது 'அஸ்தி' என்று மட்டுமே தெரிந்தது, ஆனால் அது எனது கொள்ளுத் தாத்தா என்பதால் எனது மனது வலிக்கிறது" என்று கூறினார்.
ஒரு பக்கத்தில் பிரதமர், காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். காந்தியாரைப்பற்றி கசிந்து உருகுகிறார்கள். இன்னொரு பக்கத்தில் காந்தியின் 'அஸ்தி'க்கேகூட பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக் கேடு!
அடல் பிஹாரி வாஜ்பேயி அவர்கள் பிரதமராக இருந்தபோது டில்லி, மும்பை போன்ற இடங்களில் இந்த சங்பரிவார் நாடகம் ஒன்றை அரங்கேற்றம் செய்தது. அதன் பெயர் 'மை நாதுராம் கோட்சே போல்தா' என்பதாகும்.
இதில் கோட்சேதான் கதாநாயகன். காந்தியார் வில்லன். காந்தி என்ற அரக்கனைத்தான் கோட்சே அவதாரம் எடுத்துக் கொன்றான் என்பது அந்நாடகத்தின் அடிப்படை அம்சமாகும்.
மக்கள் மத்தியிலே காந்தியாரை இழிவுபடுத்தி செய்து வரும் பிரச்சாரத்தின் விளைவுதான், மத்தியப் பிரதேசத்தில் காந்தியாரின் 'அஸ்தி' காணாமல் போன தற்கும் - படம் உடைக்கப்பட்டதற்கும் - கேவலமாக எழுதப்பட்டதற்கும் காரணமாகும்.  காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேயின் சிலையைத் திறக்கும் அளவுக்கு அழுக்காறு நோய் பரவியுள்ளது என்பதால்தான் - இந்தியப் பிரதமரை பக்கத்தில் வைத்துக் கொண்டே வெளிநாட்டு ஆட்சியாளர்கள் இந்தியாவில் ஏற்பட்டு இருக்கும் மதச் சார்பின்மையை இடித்துக் கூறுகிறார்கள் - இது இந்தியாவுக்குப் பெருமைதானா?

Monday, October 7, 2019

சீனப் பிரதமருக்கு எதிர்ப்பு திபெத் எழுத்தாளர் விழுப்புரத்தில் கைது

மாமல்லபுரம் வருகை தரும் சீனப் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்க இருந்த திபெத் எழுத்தாளரை விழுப்புரத்தில் காவல் துறையினர்  கைது செய்தனர்.
இந்தியாவுக்கு வரும் சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்க்குக்கு கருப்பு கொடி காட்ட டென்ஜின் சுண்டு (40) என்பவர் விழுப்புரம், புதுச்சேரி எல்லையில் பதுங்கி இருப்பதாக மத்திய உளவுத்துறை விழுப்புரம் மற்றும் புதுச்சேரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அனுப்பியது. இதையடுத்து விழுப்புரம், புதுச்சேரி காவல்துறையினர் கடந்த சில நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட் டனர். தமிழக எல்லையான கோட்டக்குப்பத்தில் வாடகைக்கு வீடு கேட்டு சுற்றிக்கொண்டிருந்த டென்ஜின் சுண்டுவை விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் காவல்துறை ஆய்வாளர் சரவணன்  மற்றும் காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு கோட்டக்குப்பம் அருகே தந்திரியான்குப்பத்தில் இந்திய தண்டனை சட்டப் பிரிவு 7/1ஏஇன் கீழ் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
சீனா வெளியேறு' என்ற வாசகங்கள் அடங்கிய சிவப்பு பேனரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட டென்ஜின் சுண்டு திபெத்திய எழுத்தாளரும், சமூக ஆர்வலருமாக உள்ளார்.
இவர் 2002ஆம் ஆண்டு மும்பை வந்த அப்போதைய சீனப் பிரதமர் ஜி.ரோங்ஜிக்கு கருப்பு கொடி காட்டும்போது கைது செய்யப் பட்டார். இமாச்சல் பிரதேசம் தர்மசலாவில் தங்கி இருந்த இவர் மீண்டும் 2006ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
தற்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான தேனீர் விருந்தையும், அருணா சலப்பிர தேசத்தில் ராணுவ கூட்டுப் பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளதை கண்டித்தும், மாமல்லபுரம் வருகை புரியும் சீனப் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.